Download WordPress Themes, Happy Birthday Wishes

ரணிலுக்காக துடித்த உங்கள் இதயம், ஏன் எங்கள் மக்களுக்காக துடிக்கவில்லை? பாதிரியார்!

கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதரையும் என்ற தலைப்பில் மக்கள் கருத்தறியும் அரசியல் கருத்தரங்கை, தமிழரசுக்கட்சி அணி ஏற்பாடு செய்திருந்தது.

தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உரையாற்றியவர்களின் வினாக்களிற்கு, எம்.ஏ,சுமந்திரன் பதிலுரை ஆற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் புனித லிகோரியார் ஆலய பங்குத் தந்தை றெக்ஸ் சவுந்தரா உரையாற்றினார். அவரது உரையின் இறுதிப்பகுதி இது.

பேரம் பேசும் சக்தி

இன்று தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரேயொரு மகத்தான மிகப் பெரும் சக்தி பேரம் பேசும் சக்தியே. ஏத்தனையோ சந்தரப்பங்கள் பேரம் பேசுவதற்கு உங்களுக்கு கிடைத்தன. ஐ.நாவில் கால அவகாசம் கொடுத்ததற்கு ஏற்ப இலங்கை அரசுக்காக பரிந்துரைத்த போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக நின்ற போது, இறுதியாக கடந்த ஒக்ரோபர் குழப்பத்தில் பிரதமரை நீங்கள் தூக்கிப் பிடித்தபோது பேரம் பேசுங்கோ என்று பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆனால் நீங்கள் அவற்றையெல்லாம் இலகுவாகத் தூக்கியெறிந்து விட்டு பெரும்பான்மையினரைக் குழப்பக் கூடாதென்றுவிட்டு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முண்டு கொடுத்தீர்கள். இன்று என்ன ஆனோம் நாம்?. உங்கள் தயவில் அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?. ஒரு வெற்றுத் தாளில் கையொப்பம் இட்டு யாராவது கொடுப்போமா?

கொடுத்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்… மொக்குகள் என்பார்கள். உதுகூடத் தெரியாதா என்பார்கள். இதையே ஒரு படித்தவன் செய்திருந்தால் என்ன சொல்வார்கள்?. படித்த முட்டாள் என்று சொல்லமாட்டார்களா?. இதைத்தான் இன்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

அண்மையில் வாசித்த பத்திரிகைச் செய்தி ஒன்று என்னைக் கவர்ந்தது. ஒரு தெற்கு அமைச்சர் கருத்து வெளியிடும் போது, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நாடாளுமன்றம் வந்தால் அவர்களைச் சமாளிப்பது எங்களுக்குக் கஸ்ரமாக இருக்கும் என்ற பொருள்படச் சொன்னார்கள்.

அந்தப் பயத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதிகாரம் இல்லமாமல் நாடாளுமன்று செல்லாமல் இங்கிருந்து அவர்களின் பேச்சு, தெற்கை அதிர வைக்கும் போது, அதிகாரத்தைக் கையில் கொண்டு நாடாளுமன்றம் சென்று வரும் உங்களை வீரவன்சவும், நாமலும் விமர்சிக்கிற அளவிற்கு நீங்களும், அதனால் நாங்களும் ஆகிவிட்டோம் என்று புளுங்குகின்றோம்.

அபிவிருத்தியா? உரிமைகளா?

இன்று எம் பிரதேசங்களில் ஓரளவு அபிவிருத்திகளைச் செய்து கொண்டு உரிமைகளைக் கேட்காதே என்று சொல்லாமல் சொல்கிறது அரசாங்கம். எங்களுக்கு அபிவிருத்தி தான் வேண்டுமென்று சில தமிழ்க் கட்சிகளும்… இல்லை, உரிமைகள் தான் வேண்டுமென்று இன்னும் சில தமிழ்க் கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்டு கொண்டு நிற்க, எங்கு செல்வதென்று வழிதெரியாமல் மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.

இந்தக் குட்டையில் மீன் பிடிக்கக் காத்துக் கிடந்த பிற கட்சிகள் ஆசை காட்டி, தந்திர மொழி பேசி, வழி தெரியாமல் நின்ற மக்களை தம்வசப்படுத்தி எங்கள் மண்ணில் காலூன்றி விட்டன. இதற்குக் காரணம் யார்?. இதை நீங்கள் ஐனநாயகம் என்று சொல்லுவீர்கள். இந்த ஐனநாயகத்திற்குள் கலாச்சார, மொழி, வாக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிரமிப்பு, இவையெல்லாம் நீங்கள் அறியாதவை அல்ல. ஆனாலும் ஏன் தான் அனுமதிக்கிறீர்கள். இதுவும் அரசியல் இராஐதந்திரமா?

யாழ்ப்பாணம் கள்வர் குகை

இன்று கிட்டத்தட்ட சகல துறைகளிலும் யாழ்ப்பாணம் சீரழிந்து கிடக்கிறது. போதைவஸ்துக்களின் சந்தை யாழ். குடிவகைகளின் விற்பனையில் சிகரம். அடிபிடி, வெட்டு, கொலை, ஆட்கடத்தல், பொருள் கடத்தல், வல்லுறவு என்று ஒருபுறம். விபத்துக்கள், தற்கொலைகள் மறுபுறம். இவற்றுக்குத் துணை போகும் பொலிஸாரினதும், அதிகாரிகளினதும் பொறுப்பற்ற நடவடிக்கைகள். யாழ்ப்பாணத்தில் நடந்தேறும் இந்த அராஐகங்களைப் பற்றி நீங்கள் அறியவில்லையா?

இவை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?. இவற்றை இல்லாதொழிக்க என்ன செய்தீர்கள்?. உங்களுக்குத் தெரிந்த சட்டங்கள் இவற்றுக்குப் பதில் சொல்லாதா?. இவற்றை இல்லாதொழிக்க தக்க பொறிமுறைகளை நீங்கள் வகுத்திருந்தால் மக்கள் ஒத்துழைப்புத் தந்திருப்பார்கள். அதைவிட்டு கஞ்சாவோடு பிடிபட்டவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பில் இருந்து இங்கு கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

அடிப்படைப் பிரச்சனைகளும் அன்றாடப் பிரச்சனைகளும்

அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக புதிய அரசியலமைப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நகல் முன்மொழியப்படுமா என்பதே சந்தேகம். முன்மொழியப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது வெட்ட வெளிச்சம். இந்த அரசியலமைப்பும் 2015 செப்ரெம்பரில் மங்கள சமரவீரவால் ஐ.நாவில் முன்மொழியப்பட்டதே. இது உங்களுடையதும் அல்ல. ஆகவே இதைப்பற்றிப் பேச மறுக்கிறேன்.

அன்றாடப் பிரச்சனைகள் என்று வரும் போது தங்களுடைய காணிகளைப் பறிகொடுத்துவிட்டு அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக கிட்டத்தட்ட 800 நாட்களாக வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களைச் சொல்லவா? காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி அல்லது அவர்களுக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்லி சொல்லி வீதியோரங்களில் நின்று செத்துக் கொண்டிருக்கும் அவர்களின் உறவுகளைச் சொல்லவா?

போருக்குப் பின்னான பத்து வருடங்களாக சுரண்டப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட கடல்ப் பிரதேசங்கள்… எங்கள் பரம்பரை நிலங்கள் இன்னும் அண்மை நாட்களாக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வவுனியாவின் எல்லைக் கிராமங்களை, நாயாற்றின் மையப் பகுதிகளைச் சொல்லவா?

வனவளப் பாதுகாப்பினராலும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் அங்கும் இங்குமாக எல்லையிடப்படும் எமது பிரதேசங்களைச் சொல்லவா? சிறைகளிலோ வாடும் அரசியல் கைதிகளைச் சொல்லவா?

இந்த விடயங்களில் ஏன் மௌனிகளாக இருக்கிறீர்கள்?. உங்கள் சட்ட ஒழுங்கு அறிவினாலே இந்த மக்களையும் பிரதேசங்களையும் பாதுகாக்க முடியாதா?. போராடிப் போராடி செத்துக் கொண்டிருக்கும் மக்களை ஏன் சென்று சந்திக்கவில்லை?. ஆக்கிரமிக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரதேசங்களுக்காக ஏன் உங்கள் குரலை உயர்த்தவில்லை?.

தூக்கியெறியப்பட்ட பிரதமரை மீண்டும் கதிரையில் இருத்த நீதிமன்றம் சென்ற உங்களால் காணாமலாக்கப்பட்ட ஒரு உறவை மீட்க முடியாமல் போனது ஏன். வீதியில் கிடக்கின்ற கேப்பாப்புலவு மக்களோடு ஒரு சில மணித்துளிகளைச் செலவிட முடியாமல் போனது ஏன்?. ஓரேயொரு காரணம் தான் சொல்லுவேன். அதாவது உங்கள் சுயநலம், சுயநலம் சுயநலம் தான்.

இறுதியாக

1920 ஆம் ஆண்டு சேர் பொன்.அருணாச்சலத்துடன் தொடங்கிய எங்கள் உரிமைக்கான விடுதலைப் போர், வருகிற ஆண்டு 100 ஆவது வருடத்தைத் தொடுகின்றது. இத்தனை வருடங்களாக தமிழர் நாம் பெரும்பான்மை இனவாதக் கட்சிகளினாலே ஏமாற்றப்பட்டே வருகின்றோம். வந்து கொண்டே இருக்கின்றோம்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எம்மவர்களாலேயே ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதோடு, எனது எங்களின் இந்தகச் கசிவைத் தொடர்ந்தும் கசியவிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று கூறிக் கொள்கின்றேன். இனியும் எங்கள் தலைவர்களாக உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...